Monday, December 27, 2010

பிஞ்சு மனம்

குளித்து வந்தவளின்
ஈரமான பிஞ்சுக்கைகளைப் பற்றி,
ஆட்டோவில் அமரவைத்தேன்.

எங்கள் ஊர் நடேசன் பூங்கா.
இவள் பார்த்திராதவொரு இடம்.
உள்ளே நடந்து சென்று,
யாருமில்லாத பெஞ்சில் அமர்ந்தோம்.

சீசாவில் சாய்ந்தாடி,
சறுக்குமரத்தில் ஏறி இறங்கி,
இராட்டிணத்தில் தலைசுற்றி,
ஊஞ்சலாடி வானைத் தொட்டாள்.

களைத்து வியர்த்த விரல்கள்
என்னைத் தொட்டதும்,
இருவரும் பெஞ்சிலிருந்து இறங்கி
ஆட்டோ பிடிக்க நடக்கலானோம்.

கயிற்றுக்கட்டிலை எடுத்து விரித்தேன்.
வருஷக்கணக்கில் படுத்திருந்ததால்,
அவளது சேலைகளின் அச்சு,
கட்டிலில் வார்த்திருந்தது.

Sunday, December 5, 2010

பள்ளத்தாக்கின் எதிரொலிகள்

நான் பகல்களையே பார்த்துப் பழகி,
பகலிலே உறவாடி,
நிழல்கள் நீளும்வரையே
நிகழ்வுகளைச் சுருக்கியவன்.
இமைமூடிய நிலையிலும் கண்கள்
வெளிச்சத்தை வேண்டியவாறு,
நிலைத்துநின்ற(து) காலம்.

கிரகணத்து இடைவெளியில்,
கையளவு நீரள்ளி,
என் வெண்தாமரை முகம்பார்க்கின்,
அது யாதெனத்தான் தெரியுமோ?
கரைபடிந்த கைகளென,
உள்ளம்தான் குழம்புமோ?

நான் நிழற்கோடுகளின் காதலன்.
மோகன இரவுகளின்,
மென்காற்றில் நடையிட்டு,
வந்துபோகும் நிழல்களுடன்,
பெருங்கதைகள் பேசியதுண்டு.

இமைமூட மறந்த ஒரு நாள்,
நிலவுதான் மறைந்ததோ?
மஞ்சள் முலாம் பூசி
வேடமிட்டதோ?
தெரிந்த நிழல்களைத்
தொட்டாலும் தகிக்கின்றனவே?

நான் பெருவெளியின் காதலன்.
அந்தியும் விடிவெள்ளியும்,
தூரலும் பெருமழையும்,
அமைதியும் பேரிடிகளும்,
என்னை ஆறத்தழுவிக்கொள்வன.
முகபாவனைகளும் நிழலசைவுகளும்,
இணைந்தாடும் பொம்மலாட்டத்தை,
என் தோழர்களின் எதிரொலிகள்,
இசை கோர்த்து முடித்தன.

Wednesday, November 17, 2010

வளர்பிறை

நீர் கோர்த்து உடலை
வளையிட்டு நெருக்கியதால்தான்,
தென்னை,
நெடிதுயர்ந்து விண்ணைத்தொடத் துடிக்கிறதோ?
உனை என் நெஞ்சில் இறுக்கியதால்தான்,
என் நிழல்,
எப்போதும் உனைத்தொட நீள்கிறதடி..

வேலியடைத்த ஆடு அது,
புல்லையன்றி வேறறியாது..
குளிர்க்காற்றை அடைத்துவைத்த மேகம்,
நீரையன்றி வேறெதுவும் பொழியாது..
உன்னை மட்டும் அடைத்துவைத்த நெஞ்சமடி,
உன் அன்பொன்றிலே இயங்குமது,
என் அன்பையன்றி வேறெதுவும் தாராது..

முடிகொடுத்து அருள்பெறவேண்டி,
தினம் படியேறிச் செல்வோர்களுண்டு..
உன் அன்பைப்பெறும் எண்ணத்தில்,
உன் கண்களுக்குள் இறங்குகிறேன்..

Tuesday, November 9, 2010

தொடரும்.. - 2

மூன்றாவது முறையாய் இத்தெருவினுள் நுழைந்ததைக்
கடந்து சென்ற கடலை வண்டியின்
தீப்பொறி உரசியதால் உணர்ந்தேன்.

சூடேறிய ஆற்றுமணலை அள்ளி
முகத்தில் அறைந்த சூரியன்,
வறுக்கப்படும் கடலையின் கருகிய வாசனை,
மேடுபள்ளங்களை அளந்தபடி நடந்தபோது
முறிந்து உடைந்த வலக்காலின் நகப்பட்டை,
முன்பின்னறியாதபோதும்
முழங்காலை ஒட்டி ஓடிவரும் இந்த நாய்,
இவற்றில் எதை நான் கவனிப்பது?

என் வியர்வை சூரியனுக்கா?
கருகிய கடலை எனக்கா?
வடியும் குருதி நாயிற்கா?
எதுவும் இல்லையென்றபோது தொடரச்செய்வது எது?

Sunday, September 5, 2010

கல்லேணி

ஏணிகளில் பலவகையுண்டு..
செங்குத்தாய், பற்றி ஏறும் கயிறைப் போன்றவை..
கடந்து செல்பவன்,
கயிறையோ, ஏறிச்செல்லும் படிகளையோ,
உயிராய்க் கருதவேண்டும்..

தட்டையாய், பாலத்தைப் போன்றவை..
செல்பவனின் அகமாற்றத்தைப்
பெரிதும் உதாசீனப்படுத்துபவை..

இடைப்பட்டவையே,
ஒருவனிடத்து அக, புற மாற்றங்களைக்
கொடுக்க வல்லவை..

சில படிகளில்,
நெருஞ்சி முற்களைத் தூவுவதும்,
அடுத்தவைகளில், நீரில் நனைத்த பஞ்சையும்
இட்டு வைத்து,
ஏறுபவனின் வேட்கைகளைத் தணிக்க முற்படும்..
சோர்ந்து, தளர்ந்து நிற்பவனை,
ஊக்கி, கைபிடித்து ஏற்றுவதும் நடக்கலாம்..
உச்சியேறி நடப்பவன் வந்தவழியை மறக்கலாம்..
வலுவேறிய கால்கள், அடுத்த படியைத் தேடும்..

இரும்பாலான ஏணிகள்,
என்றாவது துருப்பிடித்து,
தள்ளிவைக்கப்படலாம்..

கருங்கற்களாலானவைக்கு ஓய்வில்லை..
பாசி படியலாம், புதர் மண்டலாம்..
கும்பாபிஷேகங்கள் எதற்கு?

Tuesday, August 10, 2010

தலைமுறைகளின் ஈரம்

வண்டியில் ஏறியவுடன் ஈர்த்தது,
முன்னே சென்ற கொலுசுகள்.
அவை ஓர் இருக்கையில் நின்றுவிட,
நாகரிகம் கருதி உள்ளே சென்றேன்.

நான்காவது வரிசையில்
சன்னலோரம்
ஒடுங்கியிருந்த கிழவியின்
கம்மிய விம்மல்.
கடந்து சென்றபோது,
உள்வந்த காற்று,
அவளின் ஈரத்துடன்,
சில்லிற்று.

இங்கிருந்து சரியாக ஐந்தாவது நிறுத்தம்.

மொத்தமே நான்கு பேர்தான் இருந்தோம்.
கடைசிக்கும் முந்திய வரிசையில் கிடத்தினேன்.
கம்பியை இறுகப்பிடித்திருந்தன விரல்கள்.
கைமுட்டியும் தசைகளும்,
ஏனோ
தளர்ந்து, பிடிமானம் ஒன்றைத் தேடின.
எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.

நான்காவது நிறுத்தம்.

காற்றின் இரைச்சல்.
அழகிகளின் புன்சிரிப்புகள்.
ஓட்டுபவரின் அங்கலாய்ப்பு.
வண்டியில் என்னிருப்பை உணர்த்தின.

இரண்டு நிறுத்தங்கள்.

ஒன்றுவிட்ட தம்பி,
மகள்வயிற்றுப் பேத்தி,
யாராகிலும்.
பிறந்த வளர்ந்த கிராமத்தின்
எல்லைச்சாமி கடந்திருக்கலாம்.

அவளின் முனகல்,
பாட்டஞ்சென்ற போது,
ஓரத்தில் கிடத்தியிருந்த
செல்லமாயியின் கேவலை முன்னிறுத்தியது.

இருப்புக்கொள்ளாமல்,
முதல் நிறுத்தத்தில் இறங்கி,
நடக்கத் துவங்கினேன்.

பயணச்சீட்டைக் கிழித்து தூரப்போட்டு,
பஞ்சாயத்துக் கொட்டாயின் பாட்டுக்குக்
காதைக் கொடுத்தேன்.
பாடகனின் குரல்,
நைந்துபோயிருந்தது.

Sunday, August 8, 2010

அன்பெனும் செல்வம்

சேமிக்க மறந்தவனுக்கு
மாமன், மாப்ள, பங்காளி, தம்பி,
அக்கா, அண்ணி என
செல்லுமிடமெல்லாம் உறவுமுறைகள்..
ஊற்றுப்பெருக்கென திக்கின்றித் திறப்பதைத்
தடுத்து நிறுத்தத் தேவையானவை,
அசூயை - சில தினங்கள்,
அவசரப்பேச்சு - 1 தேக்கரண்டி,
மேதாவித்தனம் - மூளை கொள்ளுமளவு,
புறம்பேசுதல் - 1 வாய், பல காதுகள், சில ஒலிபெருக்கிகள்,
கண்சிமிட்டும் வேளையில்,
கைகுலுக்கும் இடைவெளியில் நிகழ்ந்துவிடும்,
அவனுக்கான,
துரோகம்.

Saturday, August 7, 2010

சூனியத்தில் ஞானோதயம்

மெல்ல மெல்ல ஓடியவன்,
மலைமுகடுகளுக்குள் ஒளிந்தபடி மேலெழும்பி,
மேகங்களுள் மறைந்திருந்தான்..
அடுக்கடுக்காகத் தாவிச்சென்று,
நகர்ந்துகொண்டிருந்த கதிரவனை
இருகரம் கொண்டு அள்ளி,
வைத்திருந்த மண்சட்டிக்குள் போட்டுமூடி
சூனியத்தில் தொலைந்து போனான்..

ஆன்மாக்கள் சிலவற்றை சொஸ்தப்படுத்த
வருடங்கள் ஆகுமென்றும்,
காலத்தை நிறுத்தினாலொழிய நடக்காதென்றும்
குரு  அருளியதால்,
ஞாயிறு மறைந்தால் நலமென்று
எண்ணினான் போலும்..














காயத்ரி மந்திரங்களும்,
தொழுகைகளும்
சற்று பொறுத்திருக்கலாம்..
பரமாத்மாக்களின் பின்மண்டை வட்டங்கள்
சிலகாலம் சுழலாமல் ஓய்வெடுக்கலாம்..

இருளில்,
சொஸ்தப்பட்ட ஆன்மாக்கள்
பரமாத்மாவாகும் தருணம்,
மண்சட்டி உடைந்து
பட்டொளி வீசும்..

சூனியத்தில்,
தொலைந்தவன்,
மறுபிறவியில் சொஸ்தப்படுத்தலாம்..

Wednesday, August 4, 2010

மயிலிறகுச் சீற்றங்கள்..

ஒவ்வாதவை அருகிருப்பதோ, நடப்பதோ அருவருக்கக்கூடும்..
ஒதுங்கிப் போவது வழக்கொழிந்து போயிற்று..
விடாக்கண்டனாக இருந்தும் பழக்கமில்லை..
நாராச வேலைகளில் ஈடுபாடுண்டு..

கண்ணயரும் வேளையில்,
பலாபலன்களை உளற ஆரம்பித்தது பல்லி..
இன்னும் உளறட்டும் என,
வாலை மட்டும் அறுத்துவைத்தேன்..














நண்பனின் 'சைக்கிள் பிராண்ட்' அகர்பத்தியொன்று,
அறைமுழுவதும் நடனமாடியது..
மிக மெதுவாக, அனாயாசமாக
பரணில் இருந்த பாலிதீன் பைகளைக் கிழித்து
எரியூட்டத் துவங்கினேன்..

மழை அறவே பிடிக்காததால்,
தூறலுக்கே குடையில் தஞ்சம் அடைவேன்..
எவ்வளவு இழுத்தும்,
குடைக்குள் வராத என் நிழலை,
என்றேனும் கிழித்தெறியப் போகிறேன்..

(இது முன்பொருமுறை வெளியிடப்பட்டு, தணிக்கைத்துறையால் தூக்கியெறியப்பட்டு, பின் கத்தரித்து, மாற்றுத்துணி கொண்டு ஒட்டி, கிழிசல்களோடு இப்போது உலவவிடப்பட்டுள்ளது.. ;))

Thursday, July 22, 2010

ஊர்சுற்றி

என் கைரேகை படிகிறதோ இல்லையோ,
தூசி படிவதை அனுமதித்ததில்லை..
பகுத்து வைப்பதில் காட்டும் ஆர்வம்,
நூட்களைப் படித்து முடிப்பதில் இருந்ததில்லை..

தொடர்ந்த சில நாட்களாய்,
அடுக்கியவை மாறியிருப்பதும்,
களைந்து கிடப்பதும் கண்டு துணுக்குற்றேன்..
பழையபடி அடுக்கிவைத்துவிட்டு,
யாருடைய வேலையாயிருக்கும் என வேவு பார்த்தேன்..



















ஐந்து வயது மகள்தான்
அடிக்கடி இங்கு வருகிறாள்..
வாய்ப்பாட்டு நூட்கள் என்னிடமில்லையே?
ஒருநாள் கையுங்களவுமாய்ப் பிடித்துவிட்டேன்..

ஒளித்து வைத்த மயிலிறகு,
ஒரே வீடும் ஊரும் அலுப்பூட்டுவதாவும்,
ஊர்சுற்றிப் பார்க்க இறைஞ்சியதாயும் சொன்னதாம்..
இனி நான் சுற்றிக்காட்டுவதாய்
உறுதியளித்தபின் தான் அமைதியுற்றாள்..
இதற்காகவேணும் சிலவற்றைப் புரட்டியாகவேண்டும்..


Pic: http://www.hardwaresphere.com/

Tuesday, July 20, 2010

மெய்யெனப் புனைதல்

அப்பாதையில் நடந்த சிறுவன்,
அலை அலையாய் வரையப்பட்டக்
கோலம் ஈர்த்து,
தன் காகிதக்கப்பலை மிதக்க விட,
சுழற்சியில் சிக்கி அமிழ்ந்துபோனது..

முன்யோசனையுடன் இருந்தவள்,
இம்முறை நேர்க்கோடுகளை மட்டுமே வைத்துக்
கோலத்தை வரைந்தாள்..
உள்ளூர் காட்சிக்கொட்டகையிலிருந்து
தப்பிய சிறுத்தை,
வழியறியாது ஓடிவந்து,
கோலச் சிறையில் அடைந்து,
உறுமியபடி கொட்டகைக்கே மீண்டும் சென்றது..














உயிர்கள் வஞ்சிக்கப்படுவதைப் பொறுக்காதவள்,
புள்ளிகளை மட்டுமே இட்டுவைத்தாள்..
அடர்கருப்பு நிறமுள்ள தார்ச்சாலையில்,
வெண்புள்ளிகள் நட்சத்திரங்களாய் மின்னின..
நண்பகலில், வானின் ஒருபகுதி
தரைக்கிறங்கியதாய் எண்ணி,
உயரப் பறந்துகொண்டிருந்த கழுகொன்று,
இவ்வண்டப்பெருவெளியில் விழுந்து மறைந்தது..

Thursday, July 15, 2010

சீசா

ஒருபக்கம் சாய்ந்திருந்த சீசாவின்
பாசிபடிந்த மையப்பகுதியை,
வெறித்துக் கொண்டிருந்தாள்..

எங்கிருந்தோ ஓடிவந்த சிறுமியொருத்தி,
விளையாட அழைத்தாள்..
தலையோ கருமணியோ அசையவில்லை..

மறுபுறம் ஆளில்லாதலால்,
அவ்வப்போது நகர்ந்த மையப்பகுதியை,
இமைக்காமல் பார்த்திருந்தாள்..














பந்தொன்றை உருட்டிவந்த சிறுவன்,
மறுபக்கம் உட்கார்ந்தாட,
வேகமாய், இசையோடு ஆடிய சீசாவை,
சற்று ஆயாசத்தோடு பார்த்தாள்..

அம்மா அழைத்ததால் சிறுவன் ஓடிவிட,
மறுபடியும் தனியே ஆடத்தொடங்கினாள் அச்சிறுமி..
வெகுநேரம் கழித்து,
மையத்தில் இருத்திய கண்களைச்
சிறுமியை நோக்கித் திருப்பினாள்..
அவளும் இவளைப் பார்த்தபடி ஆடினாள்..

Pic: The Bronze Sculptures

Tuesday, July 13, 2010

ஈயது விடேல்

என் பேனாவினுள் விழுந்த ஈயொன்று,
இருத்தல்கருதி,
மைகுடிக்கப் பழகியிருந்தது..

நான் எழுத நினைக்கும்போதெல்லாம்,
மை குடிப்பதோடல்லாமல்,
உறிஞ்சித் தன்பக்கம் ஈர்த்து,
வடிப்பதைத் தடுத்தது..

பிறந்ததிலிருந்தே ஜீவகாருண்யம் மிக்கவனாதலால்,
அதை விடுவித்திருக்கலாம்
அல்லது
பேனாவை ஒரமாக வைத்திருக்கலாம்..





















எழுத்தாணியோ இறகோ பயன்படுத்தினால்,
மரங்களையும் காக்கலாம் என்று
பிரச்சாரம் செய்து பிழைத்திருக்கலாம்..

எழுத்து எனை,
இறுமாப்புடையவனாய் மாற்றியிருந்தது..
உள்ளிருப்பைக் கழுவுவதாய்ச் சொல்லி
வெந்நீர் ஊற்றினேன்..
சிறிது கண்சிவந்த பேனா,
பின் தெளிந்த நீரோடையாய்ப்
பொங்கிற்று..

தகனமடைந்த ஈயின் ஆவி,
என் எழுத்துகளைச் சிதைக்காமல் இருக்க
பூக்களையும் பழங்களையும்,
அருகில் வைத்தே எழுத ஆரம்பிக்கிறேன்..

Pic: Simon Howden / FreeDigitalPhotos.net

Thursday, July 8, 2010

உயிரோவியம்

வண்ணத்துப்பூச்சிகள் மலிந்து பரவியிருந்தன..
சிலவற்றைப் பிடித்துச் சிறையிலடைத்தேன்..

வண்ணங்கள் அரிதாகின..
விலை உயர்ந்ததாயுமிருந்தன..

தூரிகைகள் தினவெடுத்துத் திரிந்தன..
பாவைக்கூத்தைக் கண்ட நாள்முதல்,
இவற்றை ஆட்டியிழுத்துப் பார்க்கத் தோன்றியது..
















வண்ணக் குழைவுகள் தீர்ந்ததைப்
பாராமுகம் கொண்டு தொடர்ந்தேன்..

சில மணித்துளிகள் கழித்து,
குழைவுகளின் தேவையற்றுப் போனதாய்,
இரோமக்கற்றைகளில் ஊற்றுப்பெருக்காய்,
வேண்டிய வண்ணங்கள் மெல்லக் கசிந்தன..

வியர்வையின் சுவையோ, வாசனையோ
அறியாதவனாய்,
இரத்தவாடை வீசியதை,
உயிருள்ள ஓவியமென,
பெரும்பொருளுக்குப் பேரம்பேசினேன்..

Pic: Free Digital Photos

Saturday, June 26, 2010

அம்புகளின் பிரதிநிதி..

இலக்கற்றுத் திரிவதுதான் இயற்கையாம்..
திரிந்தாலும் நினைவுறுத்தத் துடிக்கிறது,
காலணியில் நெருடும் சிறுகல்..

தாத்தாப்பூச்சிகள்,
பொறாமை தூண்டுபவையாவே இருந்திருக்கின்றன..
சோப்புநுரைகளைப் போல
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
தொடர்ந்து சென்று இரண்டின் முடிவுகளையும்
பார்த்திராத நாட்களில்,
இலக்குகளை உணர்ந்ததில்லை..
















அடர்த்தியும் மென்மையும் கொண்ட
அழகிய முரணாய்,
வெளியெங்கும் மிதப்பது
அசூயை கொள்ளத்தூண்டும்..
இறுதியில் அடையுமிடம்,
பிஞ்சுக் கைகளோ
முள்வேலிகளோ..
செடியாக வளர்ந்து பூப்பது,
எல்லாம் வல்ல இயற்கையிடத்து..

அம்புகளுக்கு இலக்குகளில்லை..
எய்தவனுக்கே..

உள்ளுவதும் உள்ளிழுத்தலும்.. (மையச் சிந்தனைகள் - 6)

நீட்சியடைந்த எண்ணங்கள்,
காணும் பொருளெல்லாம்,
தடம் பதித்தபடி நகர்கின்றன..
எண்ணற்ற தடங்களின்மேல்
என்னுடையதும்..
எண்ணற்ற தடங்களின்கீழும்..

துயிலெழுந்து விழிதிறந்தால்,
துளிர்விட்டு நிற்பவை தடம்பதிக்க அழைக்கின்றன..
சருகானவை மக்கி மறைகின்றன..
















என் தடங்கள் என்றினி அடையாளமில்லை..
கண்டெடுத்துச் சண்டையிட வெகுமதியுமில்லை..

அனைத்தையும் உள்ளிழுத்து,
நானாகிய என்னுடன் சிறிது
அளவளாவ வேண்டும்..

கருமணியைக் கைகள் உணரக்
கண் மூடியிருக்கவேண்டும்,
தற்காலிகமாவேனும்.

Wednesday, June 23, 2010

"அதே கரையில், உன்னுடன் கரைகையில்.."

உறவாடிச் சென்ற பறவையொன்றைப்
பிரதியெடுத்துக் காத்திருக்கும்..

ஊழிக்காற்றின் பேரலைகள்,
உனைத் தொடத் துடித்திருக்கும்..













இருந்தும், கடந்த வருடம் பதிந்த தடம்,
அழியாமல் வைத்திருக்கும்..

பிஞ்சுக் கால்களை எதிர்பாராமல்,
மலர்களைக் கொணர மறந்திருக்கும்..

சாரல் நனைத்த உடல் முழுதும்
உலர்ந்து போகலாம்..
ஒன்றிணைந்த நம்முள்ளம் என்றும்
நனைந்தேயிருக்கும்..

Sunday, June 6, 2010

விடாது கருப்பு!

கூட்டத்திலே கருப்பு ஆட்டைத் தேடுவது
காவு கொடுக்கவோ?

அவன் காகத்திலோ, எருமையிலோ
ஏறி வருவதாக எனக்குத் தெரியவில்லை..
நடந்தேதான் வந்தான்..

ஈமக்கிரியைத் தாளில்,
பதவி அடைவது,
மங்களகர மஞ்சளில் வருவதில்லையே?















பெரியாரியத்தில் ஊறியவனோ?
கையில் கருப்புக் கயிறு..

சபரிமலை சாமியோ?
அசைவ பந்தியில் எலும்பைக் கழுவியபடி இருந்தான்..

"யாரடா நீ?" எனக் கேட்டதற்கு,
"மணப்பெண்ணின் முன்னாள் காதலன்" என்றான்..
பந்தலருகே அணைந்த பந்தத்துடன் இருவரை நிறுத்தினேன்..

Pic: FreeFoto

Wednesday, May 26, 2010

மனிதனாகிப் போனேன்..

தாத்தனின் கடிகார ஊஞ்சல்,
மெல்ல தூங்கச் சென்றவனைத்
தட்டி எழுப்பியது..

ஒவ்வொரு அடியாய்,
வேகமாய் எடுத்துவைத்து,
பறக்க எத்தனிக்கும் உணர்வும்,
படையெடுப்பைப் போல்,
அடுத்த முறை பறந்திடலாம்,
என்ற நப்பாசையும் என்றுமுண்டு..

ஐம்பது ரூபாய் கொடுத்து,
பொருட்காட்சி ஊஞ்சலில் அமர்வது,
அயர்ச்சியூட்டக் கூடியது..
கல்லைத் தூக்கியெறியும் உணர்வு..
என்வீட்டு ஊஞ்சலின் தன்மையே,
நான் பறக்கிறேன்,
நானாகவே பறக்கிறேன் என்பதால்..

பள்ளிப்பருவ மழைக்காலங்களில்,
தெருமுழுதும் நீர்நிற்க,
ஊரையே காப்பாற்ற வந்த பெருங்கப்பலாக,
என் ஊஞ்சலை முன்னிறுத்தி,
நண்பர்களிடம் பெருமையடித்ததுண்டு..
நாற்காலி, படுக்கை என்று எல்லாமே
ஊஞ்சலாகிப் போன நாட்களுண்டு..

பின்னொரு சித்திரையில்,
அப்பாவுக்கு மாற்றலாகி வந்ததால்,
விலைக்குக் கொடுத்துவிட்டார்..
பெருங்கப்பலாய், விமானமாய் இன்னும்
என்னவெல்லாகவோ இருந்ததால்தான்
இடம்போதவில்லை என்றார்..

அவருக்குத் தெரிந்திருக்கவில்லை,
அவையெல்லாம் முறையே
என் உடம்பு, கை, கால்களாகிப் போனதென்று..
ஏதுமற்ற எதுவோவாகிப்போன,
உருவிப் போட்டதைப் போலிருந்தது..

என்றேனும் ஒருநாள்,
உங்கள் வீட்டுக் கதவருகே,
நின்றபடியே தூங்கிக் கொண்டிருப்பேன்..
என் ஊஞ்சலாய் இருக்குமோ
என்ற நம்பிக்கையில்..
எழுப்பிடாதீர்கள், இன்றுபோல்..

பாலையில் வேட்டை.. (மையச் சிந்தனைகள் - 5)

புரியாத மொழி பலவுண்டு..
போடாத வேஷம் பலவுண்டு..
உணராத சுவை பலவுண்டு..
உணர்ந்தும் உணரவொண்ணா, நிற்கமாட்டாத இடம் பலவுண்டு..

உள்ளூர அரித்துக்கொல்லும்
எதிர்மறைகள் குவிந்து ஈட்டி எரிய,
பறவையின் நிழலைத் தொடரும் குழந்தையைப் பாவித்து,
இல்லாத பறவையையும்,
இருளில் மறைந்திடும் நிழலையும்,
உணராமலே,
ஓடித்திரிகிறேன்..

Friday, May 21, 2010

அகத்தின் அழகு..

பதுங்கியிருந்த பலவற்றை
வெளிக்கொணர்ந்திருந்தது, மழை..

ஊர் எல்லையின் விளக்கு கண்சிமிட்டியபடி,
வழிப்போக்கரின் கண்களை மழுங்கடித்தது..

இணைதேடும் தவளைகளும்,
இலக்குகளைத் தேடும் ஆந்தைகளும்,
இருப்பை உணர்த்தும் மின்மினிக்களும்,
ஒன்றையொன்று கவனியாதே இருந்தன..

சற்றே ஈரமடைந்த
பூமியின் இரேகைகளாகக்
கிடந்த தெருக்களில்,
பதிந்த தடங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தேன்..

கூரிய நகங்கள், பூனையாக இருக்கக்கூடும்..
நரியாகவும் இருக்கலாம்..
இருப்பினும், இரத்தக்கறை எதுவும் அருகாமையிலில்லை..

சிறிய பாதத்தோடு மெல்லிய பதிவு,
நாயாக இருக்கலாம்.. தூரத்தில் முனகல் சத்தம்..

மாட்டுக் குளம்புகளின் பதியங்கள்
அங்குமிங்குமாய் தென்பட,
வல்லூறுகளின் நகக்கோடுகளும்,
அவை இழுத்துப் பறந்து சென்ற,
உடலின் சிதைந்த ரேகைகளும்..

வீடு வந்து கதவடைக்கும்போது,
நான் நடந்து வந்ததை திரும்பப் பார்த்தேன்..
கழுதைப்புலி ஒன்றின் பதிவுதான் கண்பட்டது..

ஆம், பதுங்கியிருந்த பலவற்றை
வெளிக்கொணர்ந்திருந்தது, மழை..

Friday, May 14, 2010

பட்டம் விடுதல்

அறுந்து விழும் பட்டங்கள்,
சீதக்காதிகள் தான்..
எதிர்வீடு, அண்டை வீடென்று
பாரபட்சம் பார்க்காதவை..

அந்தியின் மஞ்சளைத்
திருடித் திரித்தாற்போன்ற சுடிதார்..
கதிரவன் கண்டுகொண்டானோ அன்று,
இவனது கொள்ளிக்கண்கள்,
குறுகுறுப்புடன் கூடிய குழப்பத்தினால்,
வெளிறிப் பார்த்தன..

சட்டெனக் காய்ந்திருக்க வேண்டும்..
கதிரவனுக்கு விடுப்பளித்து விட்டான்..
சென்றவன் பழிதீர்க்க,
மேகங்களை அனுப்பினான்..

மச்சிலிருந்து இறங்கியவன்,
எதிர்வீட்டுத் திண்ணையின் சிரிப்பொலியில்,
மழலையும் இருக்கக்கண்டான்..

நீர்காற்று கலந்து பெருத்து உருவாகும்,
குமிழியின் ஆயுளும் பெரிதாமோ?

நனைந்த தாடையில் கலந்து,
கரைந்து கொண்டிருந்தது,
நீர்தான்..

Tuesday, May 11, 2010

காரணி

பற்கள் வலுப்பெறும் வரை,
உன் இரத்தம்..
ஆசனவாய் அறிதலுக்குமுன்,
உன் முடிவே, வெளியிருத்தல்..
முட்டிகள் வலுப்பெறும் வரை,
உன் யாக்கை முழுதும்..
மூளை வலுப்பெறும் வரை,
உன் வார்த்தைகள், ஓசையாய்..

கிரகிக்கும் அத்தனையும்
மோதிப் பிணைந்து நிற்க,
மேலைக்காற்றின் புழுதியில்
உருண்டோடி வந்த குப்பைப்பந்தானதென் மூளை..
பிணக்குகள் பல்கிப்போன நரம்புகளின் முடிவுகளில்,
தூசி எறிந்துபட்டதென உணரும்போதெலாம்,
உன்னின்று வெட்டப்பட்ட நகமாவேன், மயிருமாவேன்..
வலுவிழந்து, உயிரிழந்து, மண்ணாவேன்..

Saturday, April 24, 2010

பாறையாகிப் போன வரப்புகள்

என் மகளுக்கு ஆறு வயது. வரும்போதே வரம் வாங்கி வந்தாள் போலும். தாத்தனின் புடைத்த மூக்கும், சினமேறின் மூக்கினளவு கோபமும் ஒருங்கே. அத்தையின் அடமும் அப்படியே. பள்ளியாண்டு விழாவுக்கு விடாப்பிடியாய் இழுத்தவளைச் சமாதானப்படுத்தி அனுப்பி எழுத உட்கார்ந்தேன்,

ஆளுமைகள் ஆமைகளாவதும்,
இல்லாமையும், இயலாமையும்
இறையாண்மையின்
இரையாகிப் போவதும்.

சுட்டுவிரலிலும் மையேதான்
சுட்டுவதுமில்லை, சுடுவதுமில்லை
சூடுவதுடன் கையின் வேலை முடிகிறது

கொதிப்புத்தன்மையை மகளுக்குக் கடத்திவிட்டேன் போலும்
மார்ச்சு எட்டன்று மட்டும் வரும்
கொதிப்புநோய் வராமலிருக்க
ஆளுமைகளே பொறுப்பு

இவ்வாறு சென்றுகொண்டிருந்ததை நிறுத்தி வேறேதோ செய்ய ஆரம்பித்தேன். மாலை விசும்பலோடு வந்தவளை மடியிலமர்த்திக் கதை கேட்டேன். ஆச்சாரியாரின் கையால் விருது வாங்கினாளாம், பெருமையாக இருந்தது. திருமணத்திற்கு அவரளித்த சந்தனமாலையைத் தேடித் துடைத்துவைக்க வேண்டும். வேறெங்கோ வெறித்தபடி பேசிக்கொண்டிருந்தவளை வெளியே அழைத்துச்சென்று ஐஸ்கிரீம் வாங்கித்தந்து சரிசெய்ய இரவாயிற்று. மேலே எழுதியதைத் தொடர ஆரம்பித்தேன்,

குரல்வளை பாடிப்பரிசில் பெற மட்டுமே
தோள்களின் சாய்வுநிலை
என்றும் மாறுவதில்லை
சுமைகளோ சங்கிலிகளோ,
அவ்வப்போது மேலே விழும் மாலைகள்
இருப்பின், எண்ணங்களைத் தடுத்தாள முடியாதுதானே?
அவை என்றும்
உணர்ச்சி பொங்க எழும்பும் நீரலைகள்போல.
அணைக்கட்டுகள் வெளியோ உள்ளோ,
தனியனால் தகர்க்க முடியாது.
தனியனாக்கப் படுவதும் அணைக்கட்டே.