Sunday, December 5, 2010

பள்ளத்தாக்கின் எதிரொலிகள்

நான் பகல்களையே பார்த்துப் பழகி,
பகலிலே உறவாடி,
நிழல்கள் நீளும்வரையே
நிகழ்வுகளைச் சுருக்கியவன்.
இமைமூடிய நிலையிலும் கண்கள்
வெளிச்சத்தை வேண்டியவாறு,
நிலைத்துநின்ற(து) காலம்.

கிரகணத்து இடைவெளியில்,
கையளவு நீரள்ளி,
என் வெண்தாமரை முகம்பார்க்கின்,
அது யாதெனத்தான் தெரியுமோ?
கரைபடிந்த கைகளென,
உள்ளம்தான் குழம்புமோ?

நான் நிழற்கோடுகளின் காதலன்.
மோகன இரவுகளின்,
மென்காற்றில் நடையிட்டு,
வந்துபோகும் நிழல்களுடன்,
பெருங்கதைகள் பேசியதுண்டு.

இமைமூட மறந்த ஒரு நாள்,
நிலவுதான் மறைந்ததோ?
மஞ்சள் முலாம் பூசி
வேடமிட்டதோ?
தெரிந்த நிழல்களைத்
தொட்டாலும் தகிக்கின்றனவே?

நான் பெருவெளியின் காதலன்.
அந்தியும் விடிவெள்ளியும்,
தூரலும் பெருமழையும்,
அமைதியும் பேரிடிகளும்,
என்னை ஆறத்தழுவிக்கொள்வன.
முகபாவனைகளும் நிழலசைவுகளும்,
இணைந்தாடும் பொம்மலாட்டத்தை,
என் தோழர்களின் எதிரொலிகள்,
இசை கோர்த்து முடித்தன.

No comments:

Post a Comment