Tuesday, August 10, 2010

தலைமுறைகளின் ஈரம்

வண்டியில் ஏறியவுடன் ஈர்த்தது,
முன்னே சென்ற கொலுசுகள்.
அவை ஓர் இருக்கையில் நின்றுவிட,
நாகரிகம் கருதி உள்ளே சென்றேன்.

நான்காவது வரிசையில்
சன்னலோரம்
ஒடுங்கியிருந்த கிழவியின்
கம்மிய விம்மல்.
கடந்து சென்றபோது,
உள்வந்த காற்று,
அவளின் ஈரத்துடன்,
சில்லிற்று.

இங்கிருந்து சரியாக ஐந்தாவது நிறுத்தம்.

மொத்தமே நான்கு பேர்தான் இருந்தோம்.
கடைசிக்கும் முந்திய வரிசையில் கிடத்தினேன்.
கம்பியை இறுகப்பிடித்திருந்தன விரல்கள்.
கைமுட்டியும் தசைகளும்,
ஏனோ
தளர்ந்து, பிடிமானம் ஒன்றைத் தேடின.
எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.

நான்காவது நிறுத்தம்.

காற்றின் இரைச்சல்.
அழகிகளின் புன்சிரிப்புகள்.
ஓட்டுபவரின் அங்கலாய்ப்பு.
வண்டியில் என்னிருப்பை உணர்த்தின.

இரண்டு நிறுத்தங்கள்.

ஒன்றுவிட்ட தம்பி,
மகள்வயிற்றுப் பேத்தி,
யாராகிலும்.
பிறந்த வளர்ந்த கிராமத்தின்
எல்லைச்சாமி கடந்திருக்கலாம்.

அவளின் முனகல்,
பாட்டஞ்சென்ற போது,
ஓரத்தில் கிடத்தியிருந்த
செல்லமாயியின் கேவலை முன்னிறுத்தியது.

இருப்புக்கொள்ளாமல்,
முதல் நிறுத்தத்தில் இறங்கி,
நடக்கத் துவங்கினேன்.

பயணச்சீட்டைக் கிழித்து தூரப்போட்டு,
பஞ்சாயத்துக் கொட்டாயின் பாட்டுக்குக்
காதைக் கொடுத்தேன்.
பாடகனின் குரல்,
நைந்துபோயிருந்தது.

Sunday, August 8, 2010

அன்பெனும் செல்வம்

சேமிக்க மறந்தவனுக்கு
மாமன், மாப்ள, பங்காளி, தம்பி,
அக்கா, அண்ணி என
செல்லுமிடமெல்லாம் உறவுமுறைகள்..
ஊற்றுப்பெருக்கென திக்கின்றித் திறப்பதைத்
தடுத்து நிறுத்தத் தேவையானவை,
அசூயை - சில தினங்கள்,
அவசரப்பேச்சு - 1 தேக்கரண்டி,
மேதாவித்தனம் - மூளை கொள்ளுமளவு,
புறம்பேசுதல் - 1 வாய், பல காதுகள், சில ஒலிபெருக்கிகள்,
கண்சிமிட்டும் வேளையில்,
கைகுலுக்கும் இடைவெளியில் நிகழ்ந்துவிடும்,
அவனுக்கான,
துரோகம்.

Saturday, August 7, 2010

சூனியத்தில் ஞானோதயம்

மெல்ல மெல்ல ஓடியவன்,
மலைமுகடுகளுக்குள் ஒளிந்தபடி மேலெழும்பி,
மேகங்களுள் மறைந்திருந்தான்..
அடுக்கடுக்காகத் தாவிச்சென்று,
நகர்ந்துகொண்டிருந்த கதிரவனை
இருகரம் கொண்டு அள்ளி,
வைத்திருந்த மண்சட்டிக்குள் போட்டுமூடி
சூனியத்தில் தொலைந்து போனான்..

ஆன்மாக்கள் சிலவற்றை சொஸ்தப்படுத்த
வருடங்கள் ஆகுமென்றும்,
காலத்தை நிறுத்தினாலொழிய நடக்காதென்றும்
குரு  அருளியதால்,
ஞாயிறு மறைந்தால் நலமென்று
எண்ணினான் போலும்..














காயத்ரி மந்திரங்களும்,
தொழுகைகளும்
சற்று பொறுத்திருக்கலாம்..
பரமாத்மாக்களின் பின்மண்டை வட்டங்கள்
சிலகாலம் சுழலாமல் ஓய்வெடுக்கலாம்..

இருளில்,
சொஸ்தப்பட்ட ஆன்மாக்கள்
பரமாத்மாவாகும் தருணம்,
மண்சட்டி உடைந்து
பட்டொளி வீசும்..

சூனியத்தில்,
தொலைந்தவன்,
மறுபிறவியில் சொஸ்தப்படுத்தலாம்..

Wednesday, August 4, 2010

மயிலிறகுச் சீற்றங்கள்..

ஒவ்வாதவை அருகிருப்பதோ, நடப்பதோ அருவருக்கக்கூடும்..
ஒதுங்கிப் போவது வழக்கொழிந்து போயிற்று..
விடாக்கண்டனாக இருந்தும் பழக்கமில்லை..
நாராச வேலைகளில் ஈடுபாடுண்டு..

கண்ணயரும் வேளையில்,
பலாபலன்களை உளற ஆரம்பித்தது பல்லி..
இன்னும் உளறட்டும் என,
வாலை மட்டும் அறுத்துவைத்தேன்..














நண்பனின் 'சைக்கிள் பிராண்ட்' அகர்பத்தியொன்று,
அறைமுழுவதும் நடனமாடியது..
மிக மெதுவாக, அனாயாசமாக
பரணில் இருந்த பாலிதீன் பைகளைக் கிழித்து
எரியூட்டத் துவங்கினேன்..

மழை அறவே பிடிக்காததால்,
தூறலுக்கே குடையில் தஞ்சம் அடைவேன்..
எவ்வளவு இழுத்தும்,
குடைக்குள் வராத என் நிழலை,
என்றேனும் கிழித்தெறியப் போகிறேன்..

(இது முன்பொருமுறை வெளியிடப்பட்டு, தணிக்கைத்துறையால் தூக்கியெறியப்பட்டு, பின் கத்தரித்து, மாற்றுத்துணி கொண்டு ஒட்டி, கிழிசல்களோடு இப்போது உலவவிடப்பட்டுள்ளது.. ;))