Saturday, October 31, 2009

தொடரும்.. (மையச் சிந்தனைகள் - 3)

இன்றும் எனைத் தொடர்கிறான்...

வேலைக்குச் செல்லும் போது,
தெருமுனைக் கம்பத்தின் அருகே..
ஹோட்டலில் நேரெதிர் மேசையில்,
இரவுக்காட்சியின் போது பின்னிருக்கையில்,
குளிக்கையிலே முதுகுத்தண்டில்
வழிவது நீராகத்தான் இருக்கவேண்டும்..
பென்சிலைக் கூராக்கத் தரையினில்
தேய்ப்பதாய் உணர்வது அவனால்தான்..

பார்வைகள் கேள்விகளாய்ச்
சங்கிலி போட்டுத் தொடர்கின்றன..
இழுத்துப் பிடித்த நைலான் கயிறாக
எப்போதும் எனை இறுக்கத் தயங்கவில்லை..
ஓரிரவு வெட்ட முற்பட்டேன்..
சங்கிலித் தொடரை இயக்கிய நரம்புகள்
பிளவுண்டு குபுகுபுவென வெளிவந்த இரத்தம்,
கொதித்துப் போய்த்தான் இருந்தது..

இன்றும் எனைத் தொடர்கிறான்...

Friday, October 30, 2009

"கட்டு டைத் த ல்"

"அதென்னண்ணே கட்டுடைத்தல்? எதாச்சும் வீட்டப்பத்தி பேசுறீங்களோ?"
"அப்படியும் வைத்துக்கொள்ளலாம்.. வீடடைதல், வீடுபேறு இன்னபிற.."
"ஒகோ.. எப்டிண்ணே உடைப்பீங்க? கடப்பாறை எதாச்சும் வேணுமா?"
"தெளிதலும் விலகலுமே போதும்.."
"ஐயோ அப்போ நடுரோட்டுலதானா? ஆமா எதை எல்லாம் உடைக்கலாம்னு சொல்றீங்க?"
"பெருமை, சிறுமை, அச்சம், வெறுப்பு, சீற்றம், கொள்கைகள் போன்றவை வளரும்போது வருவன.. வளரும்போதே மாறுவன.. மாற்றத்தையும் கட்டிப்போடும்போது உடைக்கத்தான் வேண்டியதாகிறது.. ஏன் தொக்கி நிற்
கும் இந்தப் பத்தியைக்கூட உடைத்திடலாம்.. முயன்றால்.."
"மூச்சு வாங்குதுப்பா.. இதெல்லாம் கட்டுமான சாமான் இல்லியே? இதை எல்லாம் எப்டி உடைக்கிறது?"
"விழிப்புணர்வு, தேடல், அறிதல், புரிதல் என்று பரிமாணங்கள் உள்ளன.."
"இதெல்லாம் எங்க govt. வியாதிக்கு மட்டும்தான் சொல்றாங்க.. நீங்க என்னடானா இப்டி சொல்றீங்க? ஆமா இப்போ தான் ஞாபகம் வருது.. இந்த மாதிரி ஒருத்தர் சுத்திட்டுருந்தாரு.. ஆனா அவருக்கும் சிலை ஒன்னக்கட்டி உடச்சுகாட்டிட்டோம்ல? :P"
"...."
"அப்றோம் இது எப்டி இந்த ஒரு சமூக அக்கறை வந்துச்சு உங்களுக்கு? தனியா பண்றீங்களா? இல்லாட்டி ஒரு group ஆவா?"
"தனித்துச்செயல்படும் தன்னார்வ நிறுவனமாக உள்ளோம்.."
"அடுத்தவன் கட்டுறத உடைக்கிரதுல என்ன ஒரு ஆர்வம் உங்களுக்கு? இவ்ளோ கஷ்டப்பட்டு உடைக்கிறீங்களே? எதாச்சும் காசு கீசு?......."
".................."

Thursday, October 29, 2009

இன்மை

தண்டவாளங்களில் தேடித் பார்த்தேன்..
வாகனச் சக்கரங்களில்,
முட்செடிகளின் நடுவே,
நீர்ப்படுகைகளில்,
மின்சாரக் கம்பிகளில்,
அடர்கானகத்தின் பூடகமான இரவுகளில்,
எங்கு தேடியும் காணவில்லை,
மனிதனற்ற உயிர்களின் தற்கொலைகளை..

Sunday, October 25, 2009

"எழுத்தும் எறும்பும் .."

விதை நெல்லைத் தூவியதைப்போல்,
அங்குமிங்கும் அலைந்து திரிகின்றன..

அள்ளித் தெளித்த பாதரசம்
கூடிக் கொள்வது விந்தைதான்..

சிதறி விழும் எழுத்துக்கள்,
சேராமல் போவது ஏனோ?

சேர்ந்தே தான் சென்று
தேனைப் பருகாததேனோ?

Saturday, October 24, 2009

'சுவாசி'ப்பு

தலைகீழாய் நின்றாடும் வவ்வாலாய்ச் சில நேரம்,
ஒன்றுகூடி இழுத்துச் செல்லும் புகைவண்டியாய்,
துகள் விழுந்து அலையுண்டாக்கும் குளமாய்,
முடிமுதல் அடிவரை புரியாத, சிக்குண்ட சிலந்திவலையாய்,
கடுந்தீயில் வழுக்கி விட்ட வெண்ணையாய்,
அயர்ந்து உறங்கும் வேளையில் அதிரும் மணிவொலியாய்,
மீள்வாசிப்புகள் என்றும் இனிமையே..

Friday, October 23, 2009

தவிப்பு

ஏங்கித் தவிக்கும் உயிரெல்லாம்
எதிர்பார்ப்பது புறம் வழியே
வெளிப்படும் அகமே..
இரண்டில் ஒன்றில்லை எனில்
உயிரும் இல்லை..

ref: எழுதத் தூண்டியது..

கடந்து செல்லும் எதிர்மறைகள்.. - 4

இடைவெளியை எட்டிக் குதித்தேன்,
முற்றுப்பெறவே யில்லை,
கனவோ வெளியோ
விழத் துடிக்குமென் எண்ணமோ..

நெடிதுயர்ந்து வளர்ந்தாலுமுன் நீரை
ஏறிப்பருகப் படிகளையும்
விட்டுச் செல்கிறாய் - கணுக்களாய்..

Thursday, October 22, 2009

பற்று

உன் பாதையை மறைத்த
முட்களும் கிளைகளும் கீறின..
கசிந்தது இரத்தமே, நீரில்லை..
தடித்தாலும் பாதகமில்லை..

நம் நிழல்களைப் பிரித்தக்
கதிரவனை உதைத்தேன்..
பழுத்தும் உந்துகின்றன..

கரங்கள் மட்டும் கருவறையில்,
மென்மையாய் முழுமையாய்..
நீ பற்றி இழுத்துச் செல்வதால்..

Sunday, October 18, 2009

கிளம்புதல்

ஓயாத வாகன இரைச்சலை
கிழித்துச் செல்லும்
இன்னொரு வாகனத்தின் இரைச்சலும்
ஒரு பிச்சைக்காரியின் மௌனமும்
இன்றைய தினம் விரித்துக் காட்டிய
தோல்விகளையும் இயலாமைகளையும் பற்றி
ஏகாந்தம் வீசி எறிந்த நூல்கண்டின்
எல்லா முனைகளையும் பிடித்துத் தாவிக் கலைக்குமென் மனம்
குளிர்ந்து வீசும் காற்று
கருகிக் கையைச் சுடும் புகை
வீசி எறிந்த சிகரெட்டின்
மீதேறிச் சீறுமென் வாகனம்..
(இரைச்சலைக் கூட்டியபடி)


              - நண்பன் எழுதியது.

Saturday, October 17, 2009

மையச் சிந்தனைகள்.. - 2

மூக்கின் நுனிவரைதான் அடுத்தவரின் ஆளுமையாம்..
இயலாமையின் அம்புகள் என்னெற்றிப்
பொட்டைத் துளைக்கின்றன..

இரண்டு கண்களே என்னைத்
தகிப்பதறிந்து மூன்றாவதைப் பொட்டால்
மறைத்தாள் போலும்..

பி.கு: இது வெறும் பகடிதான்.. 'அழகு' என்ற சொல்லரசியலுக்குள் செல்வது (உடல், மன)நலக்கேடு.. :)

Friday, October 16, 2009

கடந்து செல்லும் எதிர்மறைகள்.. - 3

நடந்து வந்த வழியெங்கும்
சென்று தேடியும் சுவடுகளிடையே
நினைத்ததை மட்டும் காணவில்லை..



நெஞ்சுறுதியாம் மண்ணாங்கட்டியாம்,
பாட்டன் சென்றபோது இருந்தது,
வெங்காயஞ் சாவதில் இருப்பதில்லை..


பி.கு.: வெங்காயம் எனக்குப் பிடித்ததே இல்லை.. ராமசாமியைப் பிடிக்கும்..

Wednesday, October 14, 2009

மையச் சிந்தனைகள்..

நேற்றைய நான்
நாளைய என்னைக் கனவுற்றதை
இன்றைய நான் எள்ளிநகையாடுகிறது,
கனவுள் சென்றபடி..

Tuesday, October 13, 2009

கடந்து செல்லும் எதிர்மறைகள் - 2

ஆழமாக, மிக ஆழமாகச்சென்று,
இல்லை, மூழ்கிக் கொண்டிருந்தேன்..
பதைபதைத்தது..
சற்று தூரத்தில் மீன்கள்
துள்ளி எழும்பின, தரையில்..

எதிர்ப்பட்டவரை மிதித்தும், ஓடியும்
எஃகிப் போன கால்கள்,
சினந்தெறிக்கும் கண்கள், ஓடியதால்
அழகுற்ற பிடரி மயிர்,
எல்லை அய்யனாரின் குதிரை..

வீழ்ந்தெழுந்தேன் வீழ்ந்தெழுந்தேன்
நானென்ன ஃபீனிக்ஸ் பறவையா?
அகமோ புறமோ?
எதுவாயினும் வீழ்ந்தெழுந்தேன்..
வீழ்ந்தாலும் எழுவேன்..
வீழ்த்தினாலும்..

Sunday, October 11, 2009

பிரிவினை..

அடரிருளின் ஆளுமை அந்நேரம்..
கருமேகங்களில் ஒழிந்த பிறையும்,
மழுங்கி அழும் தெருவிளக்கும்,
இரவை நீட்டிக்க உதவின..
காற்றைக் கிழித்து மண்ணைச்
சேர்க்க முனைந்தன முகில்கள்..
கிழியாதவை நீரோடு போரிட்டுக்
குமிழியாய்ச் சிதறின.. கால்த்தடத்தைப்
பதித்துச் சென்றேன் எங்கும்..
நீண்டு வந்த முன்னிழலில்
மற்றொரு பாதம் பதிந்தது..
நிமிர்ந்த வேளை நெஞ்சில்
வலியுணர்ந்தேன்.. நிழலுடன் இணைந்தேன்..
நிழல் மறைந்தது.. விளக்கும்..
மழை நின்றும் சொட்டித்
தீர்த்துக் கொண்டிருந்ததென் குடை..

Thursday, October 8, 2009

கடந்து செல்லும் எதிர்மறைகள்..

எனைத் தைக்கும் முள்ளுக்கும்
எனைப் பிடித்தே இருக்கின்றது,
கொண்டு செல்லும் - என்துளி இரத்தத்தை.

அணைக்கத் தோள்கள் இன்றிக்
குளிரிலே நடக்கையில், கடந்து
செல்லும் வண்டிப்புகையின்
வெப்பம் - இதம்.

சில நிமிட மௌனமும்
பேச்சுக்குமிடையே வெகுநேரம் பற்றிய
கைகள் தரும் வியர்வை - ஈரம்.

உளவாளி

நான் நடக்கும் போதெல்லாம் கூடவே நடக்கிறாய்..
வெறுத்து நின்று வெறிக்கும் போதோ எனைக் கடந்து போகிறாய்..
நானறியாவண்ணம் எனைச் சுற்றி வரநினைத்தாய் போலும்..
உழலும் நேரம் சாளரத்தூடே உனைப்பார்த்துப் பேசநினைத்தேன்..
எட்டிப்பார்த்தும் நகர்ந்தோடி மறையத் துணிவாய்..
இன்றோ எனைத்துருவத் தொடர்கிறாய், நான் விழையாமலே..

துரோகம்/முரண் தொடர்(டை)..

நீர் கானலாவதும் பாலமாவதுமன்றி இல்லை..
'ஏழையின்' 'சிரிப்பில்' 'இறைவனைக்' காண்பதும்,
கண்டவனிடத்துப் 'புகழை' மட்டும் அளிப்பதும்,
விஞ்சியதை 'இங்கிருந்தே எடுக்கப்பட்டதெனக்' கொள்வதும்,
அவனிடத்தே இவற்றுக்கு 'மண்டியிட்டு நிற்பதும்'தான்..
இந்நொடியும் விலகிப் போகும்,
உன்னை விட்டு..

Ref: துரோகம்

ஆடுகளம்..

நீலவண்ணப் பட்டுச் சீலையாம்..
முந்தியை உதறியாட்டுகிறாளாம்..
விளக்கொளியும், மின்மினிகளும் மறைந்தும் போகலாம்..
சரிகைத் துளிகளையும், பதித்துப் புதைத்த
முத்துக்களையும் கொணர்ந்தால் கிட்டுமாம்,
அடுத்த ஆட்டத்திற்க்கான தாயம்..

Ref: ஆடுகளம்..