தாத்தனின் கடிகார ஊஞ்சல்,
மெல்ல தூங்கச் சென்றவனைத்
தட்டி எழுப்பியது..
ஒவ்வொரு அடியாய்,
வேகமாய் எடுத்துவைத்து,
பறக்க எத்தனிக்கும் உணர்வும்,
படையெடுப்பைப் போல்,
அடுத்த முறை பறந்திடலாம்,
என்ற நப்பாசையும் என்றுமுண்டு..
ஐம்பது ரூபாய் கொடுத்து,
பொருட்காட்சி ஊஞ்சலில் அமர்வது,
அயர்ச்சியூட்டக் கூடியது..
கல்லைத் தூக்கியெறியும் உணர்வு..
என்வீட்டு ஊஞ்சலின் தன்மையே,
நான் பறக்கிறேன்,
நானாகவே பறக்கிறேன் என்பதால்..
பள்ளிப்பருவ மழைக்காலங்களில்,
தெருமுழுதும் நீர்நிற்க,
ஊரையே காப்பாற்ற வந்த பெருங்கப்பலாக,
என் ஊஞ்சலை முன்னிறுத்தி,
நண்பர்களிடம் பெருமையடித்ததுண்டு..
நாற்காலி, படுக்கை என்று எல்லாமே
ஊஞ்சலாகிப் போன நாட்களுண்டு..
பின்னொரு சித்திரையில்,
அப்பாவுக்கு மாற்றலாகி வந்ததால்,
விலைக்குக் கொடுத்துவிட்டார்..
பெருங்கப்பலாய், விமானமாய் இன்னும்
என்னவெல்லாகவோ இருந்ததால்தான்
இடம்போதவில்லை என்றார்..
அவருக்குத் தெரிந்திருக்கவில்லை,
அவையெல்லாம் முறையே
என் உடம்பு, கை, கால்களாகிப் போனதென்று..
ஏதுமற்ற எதுவோவாகிப்போன,
உருவிப் போட்டதைப் போலிருந்தது..
என்றேனும் ஒருநாள்,
உங்கள் வீட்டுக் கதவருகே,
நின்றபடியே தூங்கிக் கொண்டிருப்பேன்..
என் ஊஞ்சலாய் இருக்குமோ
என்ற நம்பிக்கையில்..
எழுப்பிடாதீர்கள், இன்றுபோல்..
Wednesday, May 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
எங்க படம் காணும் ?
ReplyDelete:) எல்லாத்துக்கும் படம் போட்டா அத மட்டும் பாத்துட்டு ஓடிடுறீங்க!! அதான்!! :)
ReplyDelete