Tuesday, July 13, 2010

ஈயது விடேல்

என் பேனாவினுள் விழுந்த ஈயொன்று,
இருத்தல்கருதி,
மைகுடிக்கப் பழகியிருந்தது..

நான் எழுத நினைக்கும்போதெல்லாம்,
மை குடிப்பதோடல்லாமல்,
உறிஞ்சித் தன்பக்கம் ஈர்த்து,
வடிப்பதைத் தடுத்தது..

பிறந்ததிலிருந்தே ஜீவகாருண்யம் மிக்கவனாதலால்,
அதை விடுவித்திருக்கலாம்
அல்லது
பேனாவை ஒரமாக வைத்திருக்கலாம்..





















எழுத்தாணியோ இறகோ பயன்படுத்தினால்,
மரங்களையும் காக்கலாம் என்று
பிரச்சாரம் செய்து பிழைத்திருக்கலாம்..

எழுத்து எனை,
இறுமாப்புடையவனாய் மாற்றியிருந்தது..
உள்ளிருப்பைக் கழுவுவதாய்ச் சொல்லி
வெந்நீர் ஊற்றினேன்..
சிறிது கண்சிவந்த பேனா,
பின் தெளிந்த நீரோடையாய்ப்
பொங்கிற்று..

தகனமடைந்த ஈயின் ஆவி,
என் எழுத்துகளைச் சிதைக்காமல் இருக்க
பூக்களையும் பழங்களையும்,
அருகில் வைத்தே எழுத ஆரம்பிக்கிறேன்..

Pic: Simon Howden / FreeDigitalPhotos.net

4 comments: