என் மகளுக்கு ஆறு வயது. வரும்போதே வரம் வாங்கி வந்தாள் போலும். தாத்தனின் புடைத்த மூக்கும், சினமேறின் மூக்கினளவு கோபமும் ஒருங்கே. அத்தையின் அடமும் அப்படியே. பள்ளியாண்டு விழாவுக்கு விடாப்பிடியாய் இழுத்தவளைச் சமாதானப்படுத்தி அனுப்பி எழுத உட்கார்ந்தேன்,
ஆளுமைகள் ஆமைகளாவதும்,
இல்லாமையும், இயலாமையும்
இறையாண்மையின்
இரையாகிப் போவதும்.
சுட்டுவிரலிலும் மையேதான்
சுட்டுவதுமில்லை, சுடுவதுமில்லை
சூடுவதுடன் கையின் வேலை முடிகிறது
கொதிப்புத்தன்மையை மகளுக்குக் கடத்திவிட்டேன் போலும்
மார்ச்சு எட்டன்று மட்டும் வரும்
கொதிப்புநோய் வராமலிருக்க
ஆளுமைகளே பொறுப்பு
இவ்வாறு சென்றுகொண்டிருந்ததை நிறுத்தி வேறேதோ செய்ய ஆரம்பித்தேன். மாலை விசும்பலோடு வந்தவளை மடியிலமர்த்திக் கதை கேட்டேன். ஆச்சாரியாரின் கையால் விருது வாங்கினாளாம், பெருமையாக இருந்தது. திருமணத்திற்கு அவரளித்த சந்தனமாலையைத் தேடித் துடைத்துவைக்க வேண்டும். வேறெங்கோ வெறித்தபடி பேசிக்கொண்டிருந்தவளை வெளியே அழைத்துச்சென்று ஐஸ்கிரீம் வாங்கித்தந்து சரிசெய்ய இரவாயிற்று. மேலே எழுதியதைத் தொடர ஆரம்பித்தேன்,
குரல்வளை பாடிப்பரிசில் பெற மட்டுமே
தோள்களின் சாய்வுநிலை
என்றும் மாறுவதில்லை
சுமைகளோ சங்கிலிகளோ,
அவ்வப்போது மேலே விழும் மாலைகள்
இருப்பின், எண்ணங்களைத் தடுத்தாள முடியாதுதானே?
அவை என்றும்
உணர்ச்சி பொங்க எழும்பும் நீரலைகள்போல.
அணைக்கட்டுகள் வெளியோ உள்ளோ,
தனியனால் தகர்க்க முடியாது.
தனியனாக்கப் படுவதும் அணைக்கட்டே.
Saturday, April 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment