Wednesday, February 23, 2011

ஆறாம் திணை - மூளையும், மூளை சார்ந்த இடமும்

கருவறை தந்த வெப்பம்
வெளிவந்ததும் அணைந்தது..
தவழ்ந்து உருண்டு விழுந்ததெல்லாம்
வடுவாகிப்போய் பின் மறைந்தது..

நாடோடி வாழ்க்கையில்லை..
பிறையும் கதிரும் தேவையில்லை..
வெடிச்சிரிப்பைக் கேட்டதன்றி
புன்னகையைப் பார்ப்பதில்லை..
மேட்டிமைத்தனம் காட்டவன்றோ
ரணமாக்கி வைத்தததுவும்
விசும்பிடவும் நினைப்பதில்லை..

நடந்தோடிப் பிழைக்கும் பொருட்டு
முடிந்தவரை எனை மறைத்தேன்..
விழுவதையும் மறந்துவிட்டேன்..
காற்றும் புகாத காலணி கொண்டு
புட்டிப்பால் அளவிலே பூமியின் உறவு..

ஓடுவதை நிறுத்தி நடக்க முற்பட்டேன்..
முதிர்ச்சியின் அளவுகோலாம்,
களத்தின் விளிம்பையடுத்து தள்ளப்பட்டேன்..
செம்மண்ணின் தூசியேறிச்
சிவந்திருந்தன கண்கள்..

நடப்பதையும் நிறுத்திக்
காலணியைத் தூர எரிந்து,
மண்ணுக்குக் காலைக் கொடுத்தேன்..
பாலூட்டிய மெய்யின் கதகதப்பு,
ஊனேறிக் குளிர்ந்தக்கால்,
விழிவழி பால் சுரந்தது..

Monday, December 27, 2010

பிஞ்சு மனம்

குளித்து வந்தவளின்
ஈரமான பிஞ்சுக்கைகளைப் பற்றி,
ஆட்டோவில் அமரவைத்தேன்.

எங்கள் ஊர் நடேசன் பூங்கா.
இவள் பார்த்திராதவொரு இடம்.
உள்ளே நடந்து சென்று,
யாருமில்லாத பெஞ்சில் அமர்ந்தோம்.

சீசாவில் சாய்ந்தாடி,
சறுக்குமரத்தில் ஏறி இறங்கி,
இராட்டிணத்தில் தலைசுற்றி,
ஊஞ்சலாடி வானைத் தொட்டாள்.

களைத்து வியர்த்த விரல்கள்
என்னைத் தொட்டதும்,
இருவரும் பெஞ்சிலிருந்து இறங்கி
ஆட்டோ பிடிக்க நடக்கலானோம்.

கயிற்றுக்கட்டிலை எடுத்து விரித்தேன்.
வருஷக்கணக்கில் படுத்திருந்ததால்,
அவளது சேலைகளின் அச்சு,
கட்டிலில் வார்த்திருந்தது.

Sunday, December 5, 2010

பள்ளத்தாக்கின் எதிரொலிகள்

நான் பகல்களையே பார்த்துப் பழகி,
பகலிலே உறவாடி,
நிழல்கள் நீளும்வரையே
நிகழ்வுகளைச் சுருக்கியவன்.
இமைமூடிய நிலையிலும் கண்கள்
வெளிச்சத்தை வேண்டியவாறு,
நிலைத்துநின்ற(து) காலம்.

கிரகணத்து இடைவெளியில்,
கையளவு நீரள்ளி,
என் வெண்தாமரை முகம்பார்க்கின்,
அது யாதெனத்தான் தெரியுமோ?
கரைபடிந்த கைகளென,
உள்ளம்தான் குழம்புமோ?

நான் நிழற்கோடுகளின் காதலன்.
மோகன இரவுகளின்,
மென்காற்றில் நடையிட்டு,
வந்துபோகும் நிழல்களுடன்,
பெருங்கதைகள் பேசியதுண்டு.

இமைமூட மறந்த ஒரு நாள்,
நிலவுதான் மறைந்ததோ?
மஞ்சள் முலாம் பூசி
வேடமிட்டதோ?
தெரிந்த நிழல்களைத்
தொட்டாலும் தகிக்கின்றனவே?

நான் பெருவெளியின் காதலன்.
அந்தியும் விடிவெள்ளியும்,
தூரலும் பெருமழையும்,
அமைதியும் பேரிடிகளும்,
என்னை ஆறத்தழுவிக்கொள்வன.
முகபாவனைகளும் நிழலசைவுகளும்,
இணைந்தாடும் பொம்மலாட்டத்தை,
என் தோழர்களின் எதிரொலிகள்,
இசை கோர்த்து முடித்தன.

Wednesday, November 17, 2010

வளர்பிறை

நீர் கோர்த்து உடலை
வளையிட்டு நெருக்கியதால்தான்,
தென்னை,
நெடிதுயர்ந்து விண்ணைத்தொடத் துடிக்கிறதோ?
உனை என் நெஞ்சில் இறுக்கியதால்தான்,
என் நிழல்,
எப்போதும் உனைத்தொட நீள்கிறதடி..

வேலியடைத்த ஆடு அது,
புல்லையன்றி வேறறியாது..
குளிர்க்காற்றை அடைத்துவைத்த மேகம்,
நீரையன்றி வேறெதுவும் பொழியாது..
உன்னை மட்டும் அடைத்துவைத்த நெஞ்சமடி,
உன் அன்பொன்றிலே இயங்குமது,
என் அன்பையன்றி வேறெதுவும் தாராது..

முடிகொடுத்து அருள்பெறவேண்டி,
தினம் படியேறிச் செல்வோர்களுண்டு..
உன் அன்பைப்பெறும் எண்ணத்தில்,
உன் கண்களுக்குள் இறங்குகிறேன்..

Tuesday, November 9, 2010

தொடரும்.. - 2

மூன்றாவது முறையாய் இத்தெருவினுள் நுழைந்ததைக்
கடந்து சென்ற கடலை வண்டியின்
தீப்பொறி உரசியதால் உணர்ந்தேன்.

சூடேறிய ஆற்றுமணலை அள்ளி
முகத்தில் அறைந்த சூரியன்,
வறுக்கப்படும் கடலையின் கருகிய வாசனை,
மேடுபள்ளங்களை அளந்தபடி நடந்தபோது
முறிந்து உடைந்த வலக்காலின் நகப்பட்டை,
முன்பின்னறியாதபோதும்
முழங்காலை ஒட்டி ஓடிவரும் இந்த நாய்,
இவற்றில் எதை நான் கவனிப்பது?

என் வியர்வை சூரியனுக்கா?
கருகிய கடலை எனக்கா?
வடியும் குருதி நாயிற்கா?
எதுவும் இல்லையென்றபோது தொடரச்செய்வது எது?