Showing posts with label கடல். Show all posts
Showing posts with label கடல். Show all posts

Monday, March 7, 2011

கயல்

நீலப்பெருவெளியில் நீந்தித்திரிய ஆசைதான் உனக்கு..

ஓரளவுக்குப் பழகியும் இருந்தாய்..
எதிர்வரும் அலைகளை எம்பித்தாவி,
வெதும்பும் படுகையினின்று உள்ளிறங்கி,
பவழப்பாறைகளை முத்தமிட்டாய்..
அனைத்துக்கும் தோழிமாருடனே..

தூரத்துக் கதிரவன்மேல் மையல் கொண்டாய்..
தொட்டுவிட எத்தனித்து இரந்துநின்றாய்..
தோழிமார் இல்லையடி,
உன் துடுப்புகளுடன் துணைநிற்க..

உன் பெரிய வலப்பக்கத் துடுப்பிலே,
நார் ஒன்று பற்றி இழுத்தது..
பலகாலம் சுற்றித்திரிந்து,
உப்பங்கழியில் ஓய்வெடுக்கும்,
உன் தாயிடத்தில் முடிந்ததது..

உப்பங்கழியில் உறைந்திடுவாய் சிலநாளே..
தாய் பற்றிய நாரின்
மறுமுனையைப் பற்றி,
உன் கயல்விழியில் கரைந்து,
துள்ளிக்குதித்துச் சுற்றுலா செல்லக்
கூடிவரும் உறவு..

நீலப்பெருவெளியில் நீந்தித்திரிய ஆசைகொள் தோழி..

Tuesday, July 20, 2010

மெய்யெனப் புனைதல்

அப்பாதையில் நடந்த சிறுவன்,
அலை அலையாய் வரையப்பட்டக்
கோலம் ஈர்த்து,
தன் காகிதக்கப்பலை மிதக்க விட,
சுழற்சியில் சிக்கி அமிழ்ந்துபோனது..

முன்யோசனையுடன் இருந்தவள்,
இம்முறை நேர்க்கோடுகளை மட்டுமே வைத்துக்
கோலத்தை வரைந்தாள்..
உள்ளூர் காட்சிக்கொட்டகையிலிருந்து
தப்பிய சிறுத்தை,
வழியறியாது ஓடிவந்து,
கோலச் சிறையில் அடைந்து,
உறுமியபடி கொட்டகைக்கே மீண்டும் சென்றது..














உயிர்கள் வஞ்சிக்கப்படுவதைப் பொறுக்காதவள்,
புள்ளிகளை மட்டுமே இட்டுவைத்தாள்..
அடர்கருப்பு நிறமுள்ள தார்ச்சாலையில்,
வெண்புள்ளிகள் நட்சத்திரங்களாய் மின்னின..
நண்பகலில், வானின் ஒருபகுதி
தரைக்கிறங்கியதாய் எண்ணி,
உயரப் பறந்துகொண்டிருந்த கழுகொன்று,
இவ்வண்டப்பெருவெளியில் விழுந்து மறைந்தது..

Wednesday, June 23, 2010

"அதே கரையில், உன்னுடன் கரைகையில்.."

உறவாடிச் சென்ற பறவையொன்றைப்
பிரதியெடுத்துக் காத்திருக்கும்..

ஊழிக்காற்றின் பேரலைகள்,
உனைத் தொடத் துடித்திருக்கும்..













இருந்தும், கடந்த வருடம் பதிந்த தடம்,
அழியாமல் வைத்திருக்கும்..

பிஞ்சுக் கால்களை எதிர்பாராமல்,
மலர்களைக் கொணர மறந்திருக்கும்..

சாரல் நனைத்த உடல் முழுதும்
உலர்ந்து போகலாம்..
ஒன்றிணைந்த நம்முள்ளம் என்றும்
நனைந்தேயிருக்கும்..

Thursday, October 8, 2009

ஆடுகளம்..

நீலவண்ணப் பட்டுச் சீலையாம்..
முந்தியை உதறியாட்டுகிறாளாம்..
விளக்கொளியும், மின்மினிகளும் மறைந்தும் போகலாம்..
சரிகைத் துளிகளையும், பதித்துப் புதைத்த
முத்துக்களையும் கொணர்ந்தால் கிட்டுமாம்,
அடுத்த ஆட்டத்திற்க்கான தாயம்..

Ref: ஆடுகளம்..