Sunday, November 29, 2009

கலவை

'மானே, தேனே' போன்ற மசாலாக்கள் காப்பாற்றியிருந்தன..
அடுக்கி வைத்ததை மறுமுறை கொணர முடியவில்லை..
பதைபதைத்துப் போனதென் நெஞ்சம்..
கலைந்தும் கருகியும் போன எழுத்துக்கள் கலங்கி நின்றன..
வரிகளைச் சேமியாவாக வானலியில் புரட்டியிருந்தாள் அம்மா..
எழுதியதை எப்படி மறந்து தொலைப்பேன்?

Monday, November 23, 2009

'தனித்து'வம் (மையச் சிந்தனைகள் - 4)

நண்பகலில் நிழலைக் கண்டான்..
முகம், உடல் என அனைத்தும் அவனுடையதே..
தன்னையோ நிழலையோ வேறுருவம்
தீண்டலை வெறுத்தான்..

தெருக்களில் நடக்கையில்,
மரம், மாடு, மக்கள்..
இவற்றின் நிழலும் தன்னிழலில் விழாதவாறு,
தாவிக் குதித்தபடி நடந்தான்..
நடந்து கொண்டே இருந்தான்..

நின்ற இடம் ஒரு பாலை..
உள்ள வேட்கை தணிந்தது..
கதிரவன் கரைந்து கொண்டிருந்த வேளை,
புதைமணலில் நீண்டு கரையத் தொடங்கியிருந்தது,
நிழலுடன் நிஜமும்..

Friday, November 20, 2009

(வளர், தேய்) பிறைகள்..

அசந்தால் தசையினைத் துளைக்கும்
சுறாக்களினின்றும் தப்பிப்
பாறை கிடுக்குகளில் இருந்து
சிப்பிகளைப் பொறுக்கியெடுத்து,
கவர்பவர்களைத் துரத்த எத்தனிக்கும்
நீரின் செய்கையால் தள்ளிச்சென்ற
கயிற்றைத் தேடிப் பிடித்து,
அமுங்கிய பந்தாய் வந்தது
மனிதத் தவளை..

நீர்மட்டத்தினின்று மேலெழும்பி
முகிலைத் தொட்ட கழுகொன்று,
பதுங்கியோடும் வெள்ளெலி
உயிர்ப்பை உணர்த்த,
அலைந்து திரியும் காற்றை
இரை நோக்கிய பாதையாய் மாற்றி,
எதிர்ப்படும் துகள்களைத் தெறித்து,
வலுவிழந்து இறங்கியது முள்வேலியில்..

Sunday, November 15, 2009

செந்நீர்

நிமிர்ந்த நன்னடைக்காக
நாளெல்லாம் நிமிர்ந்தே
நீளகண்டனானேன்..

உன் பிஞ்சுவிரல்களைப்
பற்றி நடக்கவே
கூன் கிழவனுமானேன்..

வணங்காமுடியாய்த் திரிந்ததால்
பழுத்துச் சிவந்ததென் கரங்கள்..

அவை மீண்டும் சிவக்குமோ
என்று பதறுகிறேன்,
இன்று உன்னை நீராட வைக்கையிலே ..

Saturday, November 7, 2009

மேலாளுமை

சிங்கங்கள் கூட்டமாக இருப்பது கொடுமைதான்..
மாட்டைத் தின்றதைச் செரித்துக்கொண்டிருந்தன சில..
வாரங்களாய் உண்ணாதவையும் இருக்கத்தான் செய்தன..

இழுத்து வந்த மான்களைக் கண்ட வேளை,
வரும் ஏப்பத்தை எரித்துவிட்டு,
தனக்கான பங்கை வேறெவனும்
கைபடாமல் எடுத்துச் சென்றாயிற்று.

Tuesday, November 3, 2009

சுமைதாங்கி

ஓய்வெனப்படுவது ஓயாமல் நிற்பதாகுமா?
என் நிலை அப்படித்தான்..
கடந்து செல்லும் கால்நடைகளைக்
கண்டறிந்து கொண்டேன்..
ஆயினும் பின்னால் நிற்கும்
அய்யனார் தேவலாம்தான்..

ஒத்தையடிப் பாதை எனிலும்
குளம்படிச் சத்தங்கள் என்னை
அதிர வைக்கும்..
மூட்டை முடிச்சுகளில் இருந்து,
ஆடு, மாடுகளைக் கட்டவென
எல்லாவற்றிற்கும் என் தோள்களையும்,
கால்களையும் இரவல் தந்திருக்கிறேன்..

அருகிருக்கும் குளத்தின் பயனாய்ச்
சில நாட்களில்
மனிதரின் ஆடைகளையும்
நான் அணிந்திருக்கிறேன்,
சற்றே ஈரமாய்..

இதோ இன்று அனைத்தும்
தொலைவாகி விட்டன..
மண்டிக்கிடக்கும் கள்ளிகளோ,
கால்களைக் கீறிப் புண்ணாக்குகின்றன..
பறவைகளின் எச்சமும்,
அவை தின்றதன் மீதியுமே
தோள்களின் மீது..
இன்றும் தாங்கித்தான் நிற்கிறேன்..
பெயரென்னும் சுமையை மட்டும்..