Saturday, June 26, 2010

அம்புகளின் பிரதிநிதி..

இலக்கற்றுத் திரிவதுதான் இயற்கையாம்..
திரிந்தாலும் நினைவுறுத்தத் துடிக்கிறது,
காலணியில் நெருடும் சிறுகல்..

தாத்தாப்பூச்சிகள்,
பொறாமை தூண்டுபவையாவே இருந்திருக்கின்றன..
சோப்புநுரைகளைப் போல
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
தொடர்ந்து சென்று இரண்டின் முடிவுகளையும்
பார்த்திராத நாட்களில்,
இலக்குகளை உணர்ந்ததில்லை..
















அடர்த்தியும் மென்மையும் கொண்ட
அழகிய முரணாய்,
வெளியெங்கும் மிதப்பது
அசூயை கொள்ளத்தூண்டும்..
இறுதியில் அடையுமிடம்,
பிஞ்சுக் கைகளோ
முள்வேலிகளோ..
செடியாக வளர்ந்து பூப்பது,
எல்லாம் வல்ல இயற்கையிடத்து..

அம்புகளுக்கு இலக்குகளில்லை..
எய்தவனுக்கே..

உள்ளுவதும் உள்ளிழுத்தலும்.. (மையச் சிந்தனைகள் - 6)

நீட்சியடைந்த எண்ணங்கள்,
காணும் பொருளெல்லாம்,
தடம் பதித்தபடி நகர்கின்றன..
எண்ணற்ற தடங்களின்மேல்
என்னுடையதும்..
எண்ணற்ற தடங்களின்கீழும்..

துயிலெழுந்து விழிதிறந்தால்,
துளிர்விட்டு நிற்பவை தடம்பதிக்க அழைக்கின்றன..
சருகானவை மக்கி மறைகின்றன..
















என் தடங்கள் என்றினி அடையாளமில்லை..
கண்டெடுத்துச் சண்டையிட வெகுமதியுமில்லை..

அனைத்தையும் உள்ளிழுத்து,
நானாகிய என்னுடன் சிறிது
அளவளாவ வேண்டும்..

கருமணியைக் கைகள் உணரக்
கண் மூடியிருக்கவேண்டும்,
தற்காலிகமாவேனும்.

Wednesday, June 23, 2010

"அதே கரையில், உன்னுடன் கரைகையில்.."

உறவாடிச் சென்ற பறவையொன்றைப்
பிரதியெடுத்துக் காத்திருக்கும்..

ஊழிக்காற்றின் பேரலைகள்,
உனைத் தொடத் துடித்திருக்கும்..













இருந்தும், கடந்த வருடம் பதிந்த தடம்,
அழியாமல் வைத்திருக்கும்..

பிஞ்சுக் கால்களை எதிர்பாராமல்,
மலர்களைக் கொணர மறந்திருக்கும்..

சாரல் நனைத்த உடல் முழுதும்
உலர்ந்து போகலாம்..
ஒன்றிணைந்த நம்முள்ளம் என்றும்
நனைந்தேயிருக்கும்..

Sunday, June 6, 2010

விடாது கருப்பு!

கூட்டத்திலே கருப்பு ஆட்டைத் தேடுவது
காவு கொடுக்கவோ?

அவன் காகத்திலோ, எருமையிலோ
ஏறி வருவதாக எனக்குத் தெரியவில்லை..
நடந்தேதான் வந்தான்..

ஈமக்கிரியைத் தாளில்,
பதவி அடைவது,
மங்களகர மஞ்சளில் வருவதில்லையே?















பெரியாரியத்தில் ஊறியவனோ?
கையில் கருப்புக் கயிறு..

சபரிமலை சாமியோ?
அசைவ பந்தியில் எலும்பைக் கழுவியபடி இருந்தான்..

"யாரடா நீ?" எனக் கேட்டதற்கு,
"மணப்பெண்ணின் முன்னாள் காதலன்" என்றான்..
பந்தலருகே அணைந்த பந்தத்துடன் இருவரை நிறுத்தினேன்..

Pic: FreeFoto