Friday, December 16, 2011

Sunday, November 13, 2011

பற்று

மாற்றமது காட்சியும் மாட்சியும் ஈதலே
பற்றுமது தேற்றமென்ற பின்னரும் - ஆற்றலையோ
அத்திரியும் ஆம்பலும் மாறுவது கண்ணிமை
தைத்தன்னக் காணாத யான்.

பாவகை: ஆசிடை நேரிசை வெண்பா

Tuesday, November 1, 2011

மழலை



ஆடுவது கூத்தேதான் தேவொத்த காட்சியன்றோ

பாடுவதும் மாருதமே கேளுமடா - காடுமலை

தேடுநிதம் ஆனையும் கீரமும் சேர்ந்தவள்

ஈடுஇணை காணா மழலை.

Saturday, March 12, 2011

உயிர்ப்புள்ள கண்கள்

கண்கள்தான் எவ்வளவு கொடுத்துவைத்துள்ளன..
விடியலின் பனிக்குளிரோடு,
வண்டியோட்டும் வேகத்தில் நீர்சேர்த்த கண்கள்,
காணும் பொருளையெல்லாம் கபளீகரமிட்டன..

இதோ, வெளிர்நீளப் பூந்தோட்டம்,
மடிப்புக் கலையாத புதுப்புடவையாய்ப்
பரந்து விரிந்திருக்கிறது..

அடுத்த மைல்கல்லின்மேல்,
தன்கூட்டில் உறங்கிக்கிடந்த நத்தையொன்று,
நான் கடந்துசென்ற பின்னராவது,
வெளிவந்திருக்க வேண்டும்.

இது என்ன,
பேருந்தில் அடிபட்ட ஒருவன்,
பாவம்,
உய்ய விழைகிறான் போலவே?
இரத்தம் உறைந்துபோயிருந்தது..
கண்டிப்பாக என்னுடையதில்லை..

சென்றமுறை வந்தபோது,
கொள்ளை அழகுடன் படர்ந்திருந்த
ஏரி,
வறண்டுபோகாமல் இருக்க
உளமாற வேண்டியபடியே
வண்டியை முறுக்கிச் செல்கிறேன்..

Monday, March 7, 2011

கயல்

நீலப்பெருவெளியில் நீந்தித்திரிய ஆசைதான் உனக்கு..

ஓரளவுக்குப் பழகியும் இருந்தாய்..
எதிர்வரும் அலைகளை எம்பித்தாவி,
வெதும்பும் படுகையினின்று உள்ளிறங்கி,
பவழப்பாறைகளை முத்தமிட்டாய்..
அனைத்துக்கும் தோழிமாருடனே..

தூரத்துக் கதிரவன்மேல் மையல் கொண்டாய்..
தொட்டுவிட எத்தனித்து இரந்துநின்றாய்..
தோழிமார் இல்லையடி,
உன் துடுப்புகளுடன் துணைநிற்க..

உன் பெரிய வலப்பக்கத் துடுப்பிலே,
நார் ஒன்று பற்றி இழுத்தது..
பலகாலம் சுற்றித்திரிந்து,
உப்பங்கழியில் ஓய்வெடுக்கும்,
உன் தாயிடத்தில் முடிந்ததது..

உப்பங்கழியில் உறைந்திடுவாய் சிலநாளே..
தாய் பற்றிய நாரின்
மறுமுனையைப் பற்றி,
உன் கயல்விழியில் கரைந்து,
துள்ளிக்குதித்துச் சுற்றுலா செல்லக்
கூடிவரும் உறவு..

நீலப்பெருவெளியில் நீந்தித்திரிய ஆசைகொள் தோழி..