Wednesday, February 23, 2011

ஆறாம் திணை - மூளையும், மூளை சார்ந்த இடமும்

கருவறை தந்த வெப்பம்
வெளிவந்ததும் அணைந்தது..
தவழ்ந்து உருண்டு விழுந்ததெல்லாம்
வடுவாகிப்போய் பின் மறைந்தது..

நாடோடி வாழ்க்கையில்லை..
பிறையும் கதிரும் தேவையில்லை..
வெடிச்சிரிப்பைக் கேட்டதன்றி
புன்னகையைப் பார்ப்பதில்லை..
மேட்டிமைத்தனம் காட்டவன்றோ
ரணமாக்கி வைத்தததுவும்
விசும்பிடவும் நினைப்பதில்லை..

நடந்தோடிப் பிழைக்கும் பொருட்டு
முடிந்தவரை எனை மறைத்தேன்..
விழுவதையும் மறந்துவிட்டேன்..
காற்றும் புகாத காலணி கொண்டு
புட்டிப்பால் அளவிலே பூமியின் உறவு..

ஓடுவதை நிறுத்தி நடக்க முற்பட்டேன்..
முதிர்ச்சியின் அளவுகோலாம்,
களத்தின் விளிம்பையடுத்து தள்ளப்பட்டேன்..
செம்மண்ணின் தூசியேறிச்
சிவந்திருந்தன கண்கள்..

நடப்பதையும் நிறுத்திக்
காலணியைத் தூர எரிந்து,
மண்ணுக்குக் காலைக் கொடுத்தேன்..
பாலூட்டிய மெய்யின் கதகதப்பு,
ஊனேறிக் குளிர்ந்தக்கால்,
விழிவழி பால் சுரந்தது..

No comments:

Post a Comment