Thursday, December 31, 2009

தனிமையின் இசை

தாளமிடும் கீபோர்ட்,
மழுங்கடிக்கும் திரையிசை,
அவ்வப்போது ஒலிக்கும் அலைபேசி,
என்றேனும் இருப்பை உணர்த்தும் குக்கர்..

சொர்க்கமென்றே நினைத்தாலும்,
பாக்கிடுக்கியும், சாய்வு நாற்காலியும்
எனைப்பார்த்து ஏளனமிடுகின்றன..

Friday, December 25, 2009

வெடித்துச் சிரிக்கும் பருத்தி..

விழிகள் சிரிக்கப் பழகின..
உதவிக்காய் ஆரம்பித்து,
தினம் உதை வாங்கி விழி திறந்தேன்,
சிரித்துக்கொண்டே தான்..

சிலாகிப்புகளும் கருத்து மோதல்களும் காற்றளவில்தான்..
இருத்திய நம்பிக்கைகள், ரேகைகளையும் அழித்தன..
நா உலர்ந்தும் போயிருக்கின்றது..
நாளடைவில், கண்ணசைவுகளே போதுமென்றானது..

மொழிதலின் பயனற்றுப் போனதாய்ச் சில
நாட்கள்,
மாதங்கள்..
உலர்ந்த சேலை கம்பியினின்று பறப்பதாய் உணர்ந்தேன்..
உறவுகளுக்குள் விடுதலையென்பது மரணித்தால் மட்டுமே..

மேகங்கள் சற்றே கூடுவதாய்த் தெரிந்தது..
நலவிசாரிப்புகள் செல்லச் சாபங்களில் தொடர்ந்தது..
பீரிட்ட கண்ணீர்,
சேலையைக் கம்பியுடன் இணைத்துச் சென்றது..

Sunday, December 13, 2009

விரும்பி ஒதுங்கியவை..

நிறுத்திய குழாயின் சொட்டும் நீர்..
நிறுத்த முடியாத காலக் கணக்கு..

புழுதியேறிய திண்ணை..
கறையான்கள் அரித்த,
பூச்சுக்கள் அழிந்த நிலைக்கதவு..

முகவரியும் இல்லை..
தேடுவோரும் இல்லை..

உடைந்த சன்னல் தரும் காற்று,
உள்ளிருக்கும் யாருக்கோ..

இவ்வெழுத்துக்களைப் போல்,
உயர்திணைகள் விலகி நிற்கும்போது,
இவைபெறும் அழகு சொல்லிமாளாது..

Sunday, December 6, 2009

எழுத்தெனும் சித்திரம்..

வானில் எனக்கென்ற இடத்தைத்
தேடுவது
கடுமையாய் இருக்கிறது..

வீட்டில் மாதமொருமுறை
வெள்ளையடிக்கும் நிலை..
அப்பாவிடம் பேச்சு வாங்க பயந்தே,
முத்தத்தில் நிற்கிறேன்..
கம்பிகளின் வழியே வானை
அழுக்காக்க எண்ணம்..

நான் பாய்போடும் அறைதான்,
அவர்களளவில் அதிகக்கறை படிகிறது..
என்ன செய்ய,
தாள்களில் எழுத மனம் மறுக்கிறது..

Thursday, December 3, 2009

சாட்டையடித் தழும்புகள்..

கொட்டித் தீர்த்த மேகங்கள்,
வானைக் கீறிச் சென்றனவோ?
சருகுகள் உடைவது,
அதிரச் செய்வதேனோ?
சிக்கடைந்த ஒலிப்பேழையில்
மாண்ட இசையைத் தேடியலைவதேனோ?
ஆடியும்தான் என்னை
யாரென்று கேட்டதுவோ?
மயிலும் பாவமே..
வார்த்தைகளே போதும் எனை
வருடித் தூங்க வைக்க..

எல்லை மீறல்கள்..

மேடையில் சிந்திய வெல்லம்,
செந்தரைக்குள்ளே செல்கிறது..
வறுமையின் சின்னம் மேலோங்க,
பார்வையாளனாக முடிவெடுத்தேன்..
தறிநூலை இரட்டையாக்கிப் போட்டதைப்போல்
முன்னும் பின்னுமாய்..
நூல் காற்றிலாடுவதாய்த் தெரிகின்ற
இடங்களில் நடந்தேறுவது,
வாழ்வாதாரத்தை உணர்த்தும்
தகவல் பரிமாற்றமா இல்லை,
முத்தப் பரிமாற்றமா..

                - நண்பன் எழுதியது..