Thursday, July 22, 2010

ஊர்சுற்றி

என் கைரேகை படிகிறதோ இல்லையோ,
தூசி படிவதை அனுமதித்ததில்லை..
பகுத்து வைப்பதில் காட்டும் ஆர்வம்,
நூட்களைப் படித்து முடிப்பதில் இருந்ததில்லை..

தொடர்ந்த சில நாட்களாய்,
அடுக்கியவை மாறியிருப்பதும்,
களைந்து கிடப்பதும் கண்டு துணுக்குற்றேன்..
பழையபடி அடுக்கிவைத்துவிட்டு,
யாருடைய வேலையாயிருக்கும் என வேவு பார்த்தேன்..



















ஐந்து வயது மகள்தான்
அடிக்கடி இங்கு வருகிறாள்..
வாய்ப்பாட்டு நூட்கள் என்னிடமில்லையே?
ஒருநாள் கையுங்களவுமாய்ப் பிடித்துவிட்டேன்..

ஒளித்து வைத்த மயிலிறகு,
ஒரே வீடும் ஊரும் அலுப்பூட்டுவதாவும்,
ஊர்சுற்றிப் பார்க்க இறைஞ்சியதாயும் சொன்னதாம்..
இனி நான் சுற்றிக்காட்டுவதாய்
உறுதியளித்தபின் தான் அமைதியுற்றாள்..
இதற்காகவேணும் சிலவற்றைப் புரட்டியாகவேண்டும்..


Pic: http://www.hardwaresphere.com/

Tuesday, July 20, 2010

மெய்யெனப் புனைதல்

அப்பாதையில் நடந்த சிறுவன்,
அலை அலையாய் வரையப்பட்டக்
கோலம் ஈர்த்து,
தன் காகிதக்கப்பலை மிதக்க விட,
சுழற்சியில் சிக்கி அமிழ்ந்துபோனது..

முன்யோசனையுடன் இருந்தவள்,
இம்முறை நேர்க்கோடுகளை மட்டுமே வைத்துக்
கோலத்தை வரைந்தாள்..
உள்ளூர் காட்சிக்கொட்டகையிலிருந்து
தப்பிய சிறுத்தை,
வழியறியாது ஓடிவந்து,
கோலச் சிறையில் அடைந்து,
உறுமியபடி கொட்டகைக்கே மீண்டும் சென்றது..














உயிர்கள் வஞ்சிக்கப்படுவதைப் பொறுக்காதவள்,
புள்ளிகளை மட்டுமே இட்டுவைத்தாள்..
அடர்கருப்பு நிறமுள்ள தார்ச்சாலையில்,
வெண்புள்ளிகள் நட்சத்திரங்களாய் மின்னின..
நண்பகலில், வானின் ஒருபகுதி
தரைக்கிறங்கியதாய் எண்ணி,
உயரப் பறந்துகொண்டிருந்த கழுகொன்று,
இவ்வண்டப்பெருவெளியில் விழுந்து மறைந்தது..

Thursday, July 15, 2010

சீசா

ஒருபக்கம் சாய்ந்திருந்த சீசாவின்
பாசிபடிந்த மையப்பகுதியை,
வெறித்துக் கொண்டிருந்தாள்..

எங்கிருந்தோ ஓடிவந்த சிறுமியொருத்தி,
விளையாட அழைத்தாள்..
தலையோ கருமணியோ அசையவில்லை..

மறுபுறம் ஆளில்லாதலால்,
அவ்வப்போது நகர்ந்த மையப்பகுதியை,
இமைக்காமல் பார்த்திருந்தாள்..














பந்தொன்றை உருட்டிவந்த சிறுவன்,
மறுபக்கம் உட்கார்ந்தாட,
வேகமாய், இசையோடு ஆடிய சீசாவை,
சற்று ஆயாசத்தோடு பார்த்தாள்..

அம்மா அழைத்ததால் சிறுவன் ஓடிவிட,
மறுபடியும் தனியே ஆடத்தொடங்கினாள் அச்சிறுமி..
வெகுநேரம் கழித்து,
மையத்தில் இருத்திய கண்களைச்
சிறுமியை நோக்கித் திருப்பினாள்..
அவளும் இவளைப் பார்த்தபடி ஆடினாள்..

Pic: The Bronze Sculptures

Tuesday, July 13, 2010

ஈயது விடேல்

என் பேனாவினுள் விழுந்த ஈயொன்று,
இருத்தல்கருதி,
மைகுடிக்கப் பழகியிருந்தது..

நான் எழுத நினைக்கும்போதெல்லாம்,
மை குடிப்பதோடல்லாமல்,
உறிஞ்சித் தன்பக்கம் ஈர்த்து,
வடிப்பதைத் தடுத்தது..

பிறந்ததிலிருந்தே ஜீவகாருண்யம் மிக்கவனாதலால்,
அதை விடுவித்திருக்கலாம்
அல்லது
பேனாவை ஒரமாக வைத்திருக்கலாம்..





















எழுத்தாணியோ இறகோ பயன்படுத்தினால்,
மரங்களையும் காக்கலாம் என்று
பிரச்சாரம் செய்து பிழைத்திருக்கலாம்..

எழுத்து எனை,
இறுமாப்புடையவனாய் மாற்றியிருந்தது..
உள்ளிருப்பைக் கழுவுவதாய்ச் சொல்லி
வெந்நீர் ஊற்றினேன்..
சிறிது கண்சிவந்த பேனா,
பின் தெளிந்த நீரோடையாய்ப்
பொங்கிற்று..

தகனமடைந்த ஈயின் ஆவி,
என் எழுத்துகளைச் சிதைக்காமல் இருக்க
பூக்களையும் பழங்களையும்,
அருகில் வைத்தே எழுத ஆரம்பிக்கிறேன்..

Pic: Simon Howden / FreeDigitalPhotos.net

Thursday, July 8, 2010

உயிரோவியம்

வண்ணத்துப்பூச்சிகள் மலிந்து பரவியிருந்தன..
சிலவற்றைப் பிடித்துச் சிறையிலடைத்தேன்..

வண்ணங்கள் அரிதாகின..
விலை உயர்ந்ததாயுமிருந்தன..

தூரிகைகள் தினவெடுத்துத் திரிந்தன..
பாவைக்கூத்தைக் கண்ட நாள்முதல்,
இவற்றை ஆட்டியிழுத்துப் பார்க்கத் தோன்றியது..
















வண்ணக் குழைவுகள் தீர்ந்ததைப்
பாராமுகம் கொண்டு தொடர்ந்தேன்..

சில மணித்துளிகள் கழித்து,
குழைவுகளின் தேவையற்றுப் போனதாய்,
இரோமக்கற்றைகளில் ஊற்றுப்பெருக்காய்,
வேண்டிய வண்ணங்கள் மெல்லக் கசிந்தன..

வியர்வையின் சுவையோ, வாசனையோ
அறியாதவனாய்,
இரத்தவாடை வீசியதை,
உயிருள்ள ஓவியமென,
பெரும்பொருளுக்குப் பேரம்பேசினேன்..

Pic: Free Digital Photos