Wednesday, November 17, 2010

வளர்பிறை

நீர் கோர்த்து உடலை
வளையிட்டு நெருக்கியதால்தான்,
தென்னை,
நெடிதுயர்ந்து விண்ணைத்தொடத் துடிக்கிறதோ?
உனை என் நெஞ்சில் இறுக்கியதால்தான்,
என் நிழல்,
எப்போதும் உனைத்தொட நீள்கிறதடி..

வேலியடைத்த ஆடு அது,
புல்லையன்றி வேறறியாது..
குளிர்க்காற்றை அடைத்துவைத்த மேகம்,
நீரையன்றி வேறெதுவும் பொழியாது..
உன்னை மட்டும் அடைத்துவைத்த நெஞ்சமடி,
உன் அன்பொன்றிலே இயங்குமது,
என் அன்பையன்றி வேறெதுவும் தாராது..

முடிகொடுத்து அருள்பெறவேண்டி,
தினம் படியேறிச் செல்வோர்களுண்டு..
உன் அன்பைப்பெறும் எண்ணத்தில்,
உன் கண்களுக்குள் இறங்குகிறேன்..

Tuesday, November 9, 2010

தொடரும்.. - 2

மூன்றாவது முறையாய் இத்தெருவினுள் நுழைந்ததைக்
கடந்து சென்ற கடலை வண்டியின்
தீப்பொறி உரசியதால் உணர்ந்தேன்.

சூடேறிய ஆற்றுமணலை அள்ளி
முகத்தில் அறைந்த சூரியன்,
வறுக்கப்படும் கடலையின் கருகிய வாசனை,
மேடுபள்ளங்களை அளந்தபடி நடந்தபோது
முறிந்து உடைந்த வலக்காலின் நகப்பட்டை,
முன்பின்னறியாதபோதும்
முழங்காலை ஒட்டி ஓடிவரும் இந்த நாய்,
இவற்றில் எதை நான் கவனிப்பது?

என் வியர்வை சூரியனுக்கா?
கருகிய கடலை எனக்கா?
வடியும் குருதி நாயிற்கா?
எதுவும் இல்லையென்றபோது தொடரச்செய்வது எது?